Daily Venpa


Venpa

2016-05-09
’’மதிய உதயம்’’
——————————

‘’STILLNESS SPEAKS”
————————————-

”ECKHART TOLLE”
—————————–

’’ஆழ்மனம் கொண்ட அமைதியே ஆண்டவன்:

பாழ்மன புத்திப் புரவியில் -தாழ்வுற,

டொக்டொக்டொக் என்று தரையில் உலவாது

டக்கென்று வானுக்குத் தாவு’’….கிரேசி மோகன்…

2016-05-09
KRISHNA FOR TODAY….
—————————————–

’’விலைவாசி  ஏற்றத்தில்  வாத்ஸல்யம்  விற்றல்:

அலைவாசிக் கண்ணனவர் ஆவின் -தலைசாய்த்து,

தன்மடியில் வைத்ததற்கு  தாலாட்டாய்  ஊட்டுகிறான்:

கண்மூடி சொக்குது கன்று’’….கிரேசி மோகன்….


2015-07-29

KRISHNA FOR TODAY….
—————————————–

’’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’
(இசைக்கவி ரமணனின்)பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் முயன்றது….
—————————————————————————
‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி
அங்கையேந்தும் அவதார விஷ்ணு
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(1)

‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற
வானவைகுந்தனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(2)

‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
உடல்சுமந்த ஆமையே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(3)

’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
நெம்பிய வராகரே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(4)

‘’தானாடும் துட்டனைத் தரைமட்டம் ஆக்கிட
தூணாடும் துரைசிங்கனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(5)

‘’வந்தபின் வரம்வாங்கி அந்தவான் உலகளந்த
அந்தணன் வாமனனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(6)

’’ராமபரசு ராமஅரசு ராமபல ராமனாய்
நாமமொன்று நடிப்புவேறு
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(7)

‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
கோபாலக் கண்ணனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(8)


KRISHNA FOR TODAY….
—————————————

’’ஞானேஸ்வரி’’ பாவார்த்த தீபிகா(பகவத் கீதைக்கு ஞானதேவரின் உரை) படிக்கையில் தோன்றியது….

விஸ்வரூபம் கண்டு பயந்த பார்த்தனை,

எள்ளி நகையாடி, பழையபடி க்ருஷ்ணரூபம் காட்டி

சமாதானம் செய்விக்கிறார்….எனக்கென்னமோ

கேசவின் இந்தப் பசுதான் பார்த்தன்….பதி பகவான்….

பாசம் பிரேமை…..

‘’நிஜத்தினை விட்டு நிழலைப் பிடிக்க,

புஜத்தினை நீட்டுகிறாய் பார்த்தா !, -அசத்துநீ,

விஸ்வரூபம் கண்டு வெலவெலத்தாய், வந்துசெல்லும்

க்ருஷ்ணரூபத் தில்குளிர் காய்’’….கிரேசி மோகன்….


2015-07-28

இன்று ”கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின்” பிறந்த நாளில் அடியேனின் மலரும் நினைவுகள்….இளமையில் ”தண்டமிழ் கொண்டல் சிதம்பரம் ஸ்வாமினாதன்” தலைமையில் ”சிந்தனைக் கோட்டம்” என்ற அமைப்பில், வாராவாரம் கவிஞர்கள் சுகி சிவம், வானவில் பண்பாட்டு நிலையத்தின் தலைவர் வக்கீல்/ கவிஞர் க.ரவி, எனது தோழன் சு.இரவி எல்லோரும் கூடி கவிகளை பாடி மகிழ்வார்கள்….இந்த அஷ்ட திக் கஜங்களுக்கு மத்தியில் அடியேன் தெனாலி ராமன் போல் அமர்வதுண்டு….அப்போது எங்கள் கிருஷ்ண தேவராயர் ”தண்டமிழ் கொண்டல்” ‘ துலங்குவெண் நீறு துனிப்பிறைக் கோடு துணைக்கரங்கள்” என்று துவங்கும் கட்டளைக் கலித்துறை பாடல் இன்னமும் என் காதில் ஒலிக்கிறது….அதே போல் ”கொத்து வேப்பிலை கைத்தலத்திடை-வைத்த நற்குங்குமச் சிலை-தொழ- வாடும் உன் மன்மதக் கலை” என்ற சுகி சிவத்தின் பாடல் எனது முதல் கவிதை அறிமுகம்….க.ரவி நன்றாக ஆழ்ந்த பொருளோடு மேடையில் கம்பீரமாகப் பேசுவார்….நாங்கள் எல்லோரும் பிற்காலத்தில் ”சுகி சிவம்” சிறந்த கவிஞராகவும், மகாகவி பாரதியாரின் தத்துப் பிள்ளை ”க.ரவி” சிறந்த பேச்சாளராகவும் வருவார் என்று பேசிக் கொள்வதுண்டு….ஆனால் ”சுகி சிவத்தை” வீராவேசமாகப் பேசும் மேடைப் பேச்சாளராகவும், ”க.ரவியை” நளினமான யதார்த்தக் கவியாகவும் ”காலமாம் மரத்தில் அண்ட -கோலமா மரத்தின் மீது -காளி சக்தி என்ற பெயர் கொண்டு -ரீங்காரம் இட்டு உலவும் ஒரு வண்டு”, பிரகருதி எங்கள் எண்ணத்திற்கு மாறாக மாற்றி அமைத்து விட்டது….வெற்றியையும் அருளியது….வாழ்க சக்தி….ஒரு கவிமன்றத்திற்காக நாங்கள் ”ஆம்பூர்” சென்றபோது, தொத்திக் கொண்ட என்னையும் மேடையில் கவிதை கத்தச் சொல்லி கட்டளைக் கலித்துறை இட்டார் ”தண்டமிழ் கொண்டல்” அய்யா…தட்ட முடியாது….காரணம் அவர் என் தம்பிக்கு தமிழ் ட்யூஷன் வாத்தியார்….வேறு வழியில்லாமல் ஆம்பூர் சத்திர தொட்டியில் குளித்தபடி ஒரு கவிதை யோசித்துப் பாடினேன்….அது….”முகிலாண்ட இமயத்து, முக்கண்ணன் இதயத்தில்-முருகாக நின்ற உமையே-அகிலாண்ட நாயகி, அகலாதென் உள்ளத்தில் அணுவாக நின்ற சுமையே- அகிலுண்ட வாசத்தின் அலையான கேசத்தின் – ஆறாத பாரத்தினால்-துகிலாண்ட இடைசற்று துவளவே நடையிட்டு-துணையாக வா காளி நீ”….என் முதல் கவிதை இது….அப்போது என் தோழன் சு.இரவி, அடிக்கடி ”கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின்” உமர்கய்யாம் மொழிபெயர்ப்பை என்னிடம் மனதில் பதியும் வண்ணம் கூறுவான்….”வெய்யிலுக்கு ஏற்ற நிழலுண்டு-வீசும் தென்றல் காற்றுண்டு-கையில் கம்பன் கவி உண்டு-கலசம் நிறைய மதுவுண்டு”…..இந்த எளிமையான வரிகளின் தாக்கம் இன்னமும் எனக்குண்டு….பிற்காலத்தில் தேசிக வினாயகம் பிள்ளையின் இந்த மீட்டரில் அடியேன் க்ரேசிக வினாயகம் பிள்ளை(கவிதைக் குழந்தை) எழுதிய பாடலை பகிர்ந்து கொள்கிறேன்….


இட்டிலி சாம்பார் வடையுண்டு
இனிக்கும் டிகிரி காப்பியுண்டு
பட்டுத் துளிர்வெற் றிலையுண்டு
புகையிலை வறுவல் சீவலுண்டு
விட்டம் சுற்றும் ஃபேன் உண்டு
வீசும் ஏஸிக் காற்றுண்டு
கட்டுரை கதைகள் பலவுண்டு
கல்கி தேவன் அதிலுண்டு….கிரேசி மோகன்….


2015-07-25

KRISHNA FOR TODAY….
——————————
———

ஓவிய  வைத்தியர் கேசவ் கூறுவது(அடியேன் புரிந்து கொண்ட மட்டில்),
‘’PREVENTION IS BETTER THAN CURE”….காக்கும் கடவுள் கண்ணன் கஷ்டம்
வரும்முன்  காத்திடுவான்….இந்திரனால் மழைவரும்முன் கன்றுகளை
மேகத்திற்கு மேல் தூக்கி அவை நனையாதபடி காக்கின்றான்….சூப்பர் கேசவ்….
நான் புரிந்து கொண்டது சரிதானா….!கோவர்த்தனனை நம்பினால் EGOமர்த்தனம் ஆகிடும்….

”குன்றெடுத்து ஆயரை  அன்றுகாத்த  கண்ண(ன்)இன்று

கன்றெடுத்து  மேகத்திற்  கப்பாலே, -நன்றிது,

கேசவ்  மழைவருமுன்,  காத்திடும்  வைத்தியனாய்,

ஈசனைப் போட்டாய்(வரைந்தாய்)  இனிது’’….(OR)….

ஈசனுன்  கையில்  இருப்பு’’….கிரேசி மோகன்….

KRISHNA FOR TODAY….
—————————————

”கோசகா  ஏ!ராச  கோபாலா!,  உங்கம்மா,

தோஸயை  வாத்தாளோ, தின்னுபுட்டு, -கேசவ்க்கு,

போஸளித்து, அம்மாசேய் ஆஸதோஸ பாதமுண்ண,

பாச முடன்பங்கு  போட்டு’’….கிரேசி மோகன்….

KRISHNA FOR TODAY….
————————————–

கண்ணன் வந்த காரியம் பூபாரம்
குறைக்க தேரோட்டி, கீதை சொல்லி,
அர்ஜுனனை தேற்றி, நூறழிக்கவே….
அதற்குள் வைகுண்டம் செல்ல ஆசை அவனுக்கு….
மகாலஷ்மியைப் பார்க்கவோ….!


”சினமா  மனைக்கொன்ற  சீராயர்  செல்வா!,

தின(ம்)மாலி(ஃளூட்) ஊதல்  திகட்டியதோ!, -வனமாலி

வானமாலி ஆனதேன்,  வைகுண்டம் செல்லலாமா!,

சேணமாளல் தானே சுபம்’’….கிரேசி மோகன்….

சேணம்-குதிரைக் கடிவாளம்….

2015-07-24


ஃலிப்கோவின் ”குமார சம்பவம்” ஒரிஜினல் தமிழாக்கம் படித்து ஒரு ஸ்லோகத்திற்கு ஒரு வெண்பா என்று முன்பு தீவீரமாக எழுதினேன்….பரமசிவம் தன் பாதியை(சக்தி) சேரும் சர்கத்தில் வெண்பாவை பாதியிலேயே நிறுத்திவிட்டார்….ஏன் என்பது அந்த முக்கண்ணுக்கே வெளிச்சம்….எழுதிய வரையில்….

குமார சம்பவம்
——————————

காப்பு
———————-
சிவபார்வதி
—————-
சொல்லும் பொருளுமாய், அல்லும் பகலுமாய்
கல்லும் கடவுளாய் கோர்ந்திருந்து -புல்லும்
உமாமஹேச தம்பதியின் ஊக்கம் விழைகிறேன்
குமாரசம்ப வம்செய் குறித்து….(1)….2-10-2010

முருகன்
———-
உன்பிறப் புக்குமுன்னால் உண்டான சம்பவத்தை
தன்படைப்பில் காளிதாசன் தந்ததைமுக் -கண்பிறப்பே
முந்தைத் தமிழில் மொழிபெயர்த்திட மூலமே
வந்தெனக்கு கைகொடுத்து வாழ்த்து….(2)….2-10-2010

பிள்ளையார்
—————
உன்னை மறந்தால் உலகம் பழித்திடும்
என்னை, எருக்கம்பூ ஏகனே -முன்னை
கந்தன் மணமுடித்தாய், எந்தன் மொழிபெயர்ப்பில்
தந்தை மணமுடிக்கத் தாவு….(3)….2-10-2010

சரஸ்வதி
———–
செல்வம் செலவாகும், வீரம் வயதாகும்
கல்வி குறையாது குன்றாது -பல்கிப்
பெருகிட வைத்திடும் பாரதியின் நூலுக்கு
அருகிருந்து சேர்ப்பாய் அறிவு….(4)….2-10-2010

காளிதாசன்
—————
வாடாத பாக்களை வாணியின் பாதத்தில்
காடாய்க் குவித்தமகா காளிதாசா -சீடனாய்
ஏற்றென்னை நம்மன்னை சாற்றிய தாம்பூலச்
சாற்றையென் பாழ்வாயில் சிந்து….(5)….2-10-2010

சு.ரவி
——–
நண்பாநீ மந்திரியாய் நல்லா சிரியனாய்
வெண்பாநான் செய்ய வகைசெய்தாய் -பண்பால்
சிறந்தவனே இந்நூல் சுரந்திட என்னுள்
கரம்தந்(து) அளித்திடுவாய் காப்பு….(6)….14-10-2010
——————————————————————–
சர்கம்-1
———-
கரையற்று நீண்டு குடதிசையில் மேற்கில்
வரையற்ற வாரிதி வெள்ளம் -வரையுற்றுப்
பாரின் அகலத்தைப் பார்க்கும் அளவுகோல்
பாரீர் இமயமதன் பேர்….(1)….30-9-2010

கன்றாய்யிக் குன்றினைக் காட்டியம் மேருமலை
நின்று கறக்க, நிலப்பசு -என்றும்
சுரந்திடும் ரத்தினம் சஞ்சீவிப் பாலை
வரம்தரும் வெற்பை வணங்கு….(2)….1-10-2010

சீதளம் சேர்த்திடும் சந்திரன் மேலுற்ற
பாதகம் பாராட்டா பண்புடைத்தோம் -மேதினிக்கு
எல்லா சுபிட்சமும் நல்கும் இமகிரிக்கு
பொல்லாப் பனியா பொருட்டு….(3)….1-10-2010

விண்சார்ந்த அப்ஸர வல்லிகள் பூசிடும்
செஞ்சாந்து வாசத்தூள் சூழ்ந்தவுச்சி -மஞ்சோடு
பட்டுச் சிதற பரிதி ஒளிசிவக்கப்
பட்டப் பகலிலந்திப் போது….(4)….1-10-2010

கோடையில் சித்தர்கள் வாடிடாது வெண்மேக
ஆடை நிழலடியில் ஆசிரமம் -ஜாடை
கருத்தவை பெய்கையில் குளிருக்(கு) இதமாய்
சிரத்தினில் வெய்யில் சுகம்….(5)….1-10-2010

மதக்களிறின் மீதேறி மத்தகத்தில் சிங்கம்
சதையுறிய முத்துக்கள் சிந்தும் -இதையறிந்த
வேடன் அரிமா வழியை அறிவானாம்
மூடும் பனியில் முனைந்து….(6)….1-10-2010

தேர்ச்சிமிகு வித்யா தரப்பெண்கள் நேசத்தை
ஊர்ஜிதமாய், செங்காவி ஊற்றுமையால் -பூர்ஜர
ஏட்டில் எழுத எதுகை இமயம்தான்
காட்டிடும் காதல் கொடி….(7)….1-10-2010

விண்ணுறும் வெற்புகுகை வாய்திறந்து மூங்கிலதன்
கண்ணூர்ந்து புல்லாங் குழல்காற்றை -கின்னரர்தம்
கானமேல் ஸ்தாயிக்கு தான சுரம்பிடிக்கும்
ஞானம் மிகுந்தமலை நாடு….(8)….2-10-2010

ஆவலோடு கன்னத்தை ஆனை தினவெடுத்து
தேவதாரு தேகத்தில் தேய்த்திட -சீவலாக
தோலுறிந்த பட்டையில் பால்சுரக்க வாசத்தை
மேலிருந்தும் வீசும் மலை….(9)….2-10-2010

கூடிக் குலவிடும் வேடர்க்(கு) உதவியாய்
வீடாம் குகையில் விளக்கதற்கு -ஈடாக
மூலிகைத் தாவரம் மூட்டிட தீபவொளி
மாளிகைபோ லாக்கும் மலை….(10)….2-10-2010

பாரமான பின்புற(ம்)அ பாரமான கொங்கைகள்
ஈரமான பாறைப் பனிநீரும் -சேரவொன்றாய்
கின்னரப் பெண்கள்தம் இன்னலையும் பாராது
அன்ன நடைபயில்வர் அங்கு….(11)….2-10-2010

அல்பனே ஆயினும் அய்யா சரணென்றால்
சொல்பமும் பாராட்டா சான்றோர்போல் -அல்பயலை
சூரியன்கை சிக்காது சேர்த்து குகைக்கரத்தால்
வாரி அணைக்கும் வெற்பு….(12)….2-10-2010

கோனிங்(கு) இமவான் குளிர்சா மரமிங்கு
வானின் வளர்மதி வெண்கவரி -மானின்வால்
ஆகமலை ஆளும் அரசனே இங்குமலை
ஆக இருத்தல் அழகு….(13)….2-10-2010

கூச்சமுறும் கின்னரப்பெண் கூறை களைகையில்
ஆச்சரியம் கொள்வால் அதைப்பார்த்து -மூச்சிறைக்க
மேகம் குகைவாசல் போகும் திரையாக
மோகத் துணைபோகும் மஞ்சு….(14)….2-10-2010

தேவகங்கை நீர்த்திவலை, தேவதாரு தூமணம்
மேவுமயிற் தோகை மிருதுவும் -தாவிவரும்
காற்றில் கலந்திருக்க காட்டில் களைத்தவேடர்
ஏற்றடைவர் ஏகாந்த மே….(15)….3-10-2010

ஏழுரிஷி கொய்தபின்பு எஞ்சும் உயிர்மொட்டை
வாழும் கமலங்கள், வெற்படியில் -சூழும்
கதிரோனின் மேல்நோக்கும் கைக்கிரணம் பட்டு
உதிரும்முன் பூக்கும் உவந்து….(16)….3-10-2010

வேள்விப் பொருட்கள் விளைவதால், பூபாரக்
கேள்விக் குறிக்குவிடை கண்டதால் -நூல்வைத்த
நான்முகன் யாகத்தில் கோன்பெறும் பாக(ம்)இம
வான்முகம் வைத்தான் விழைந்து….(17)….3-10-2010

பித்ருக்கள் மானசீகப் புத்ரி, முனிகணங்கள்
தத்தெடுத்த நெஞ்சின் தவப்புதல்வி -உத்தமி
மேனை மணம்புரிந்தாள் மேருவின் தோழ(ன்)இம
வானையவன் வம்சம் வளர்த்து….(18)….3-10-2010

நாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை
தேகநீர் ராஜனுக்குத் தோழனும், -போகரெக்கை
வானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன்
மேனாள் வயிற்று மகன்….(19)….3-10-2010

தக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய்
துக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) -அக்கினியில்
முன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள்
அன்பு இமவான் அகம்….(20)….3-10-2010

உற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும்
நற்சாதி செல்வ நிகழ்வேபோல் -அச்சாக
மங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி
சங்கரியாய் வந்தாள் சதி….(OR)
திங்களெனத் தோன்றினாள்ச தி….(21)….3-10-2010

தெளிந்த திசைகளாய், தூசற்ற காற்றாய்
ஒளிந்த அமரர் ஒலியாய் -மலர்ந்தபூ
பார்மீது மாரியாய் பல்லுயிர்க்கும் இன்பமாம்
பார்வதி தோன்றிய போது….(22)….3-10-2010

அதிருமிடிச் சத்தம் விதூரமலை மொத்தம்
எதிரொலிக்க பூமிவாய் ஏற்று -உதிரவிடும்
ரத்தின ஜோதியாய் பெத்தவளும் புத்திரியும்
புத்தொளிகொண்(டு) உற்றார் பொலிவு….(23)….3-10-2010

சுக்கில பட்ச சசிகலைகள் போல்தினமும்
இக்குலம் வந்த இமவான்பெண் -சொக்கவைக்கும்
அங்கங் களடைந்து அக்கலைக்(கு) ஈடாக
பொங்கும் அழகுற்றாள் பூத்து….(24)….4-10-2010

உற்றார் அவளை உவந்து அழைத்தனர்
பெற்றோர் குலப்பெயர் பார்வதியாய் -மற்றோர்
சமயத்தில் தாயார் சதியைத் தடுத்தாள்
உமையே தவமேன் உரைத்து….(25)….4-10-2010

உசந்தவகைப் பூக்கள் அசைந்தும்மாம் பூவை
வசந்தருது வண்டு விரும்பும் -அசங்காது
பார்வதியைய் பார்த்திமவான் பூரிப்பான், தம்மக்கள்
யார்வதை உற்றுமிமை யான்….(26)….4-10-2010

விளக்கழகு தீபவொளி, வானழகு கங்கா
இலக்கணப் பேச்சழகு இன்சொல் -மலைக்கரசன்
பெற்றமகள் பார்வதியால் பெற்றான் பரிசுத்தம்
வற்றா வளமையுடன் வாக்கு….(27)….4-10-2010

ஓயாது தோழியரோ(டு) ஓடி விளையாடி
காயாத கங்கைக் கரைமணலில் -சேயாக
மேடைகள் செய்தும் மலர்பந்து வீசியும்
நாடகம் ஆடினாள் நன்கு….(or)
வேடமிட்டாள் வையவாழ் வொத்து….(28)….4-10-2010

போதுசரத்தில் கங்கையைப் போயடையும் அன்னம்போல்
ஜோதிர் லதையொளிரும் ஜாமம்போல் -ஓதிய
முற்பிறவி கற்றதெலாம் பார்வதியைப் பற்றியதாம்
விற்பன்னன் காளிதாசன் வாக்கு….(29)….5-10-2010

மாதவள் தோற்றம் மனதை மயக்கிய
போதுமது அல்லவே புன்மது -காதலான்
வாளிக்கும் மேலாய் வலிந்திடாது பார்வதி
வாலிபத்தைக் கொண்டாள் வளர்ந்து….(30)….5-10-2010

தூரிகையால் சித்திரம் தேர்ச்சி யுறுதலாய்
சூரியனால் தாமரையின் சோபையாய் -காரிகையாய்
யவ்வனத்தைப் பார்வதி எட்டினள் மெல்லமெல்ல
அவ்வனப்பே ஆரா அழகு…(31)….5-10-2010.

பட்டழுந்த பூமியில் பார்வதி செல்கையில்
கட்டை விரல்நகம் கொப்பளித்த -இட்ட
பதச்செந் நிறத்தால் பதுமத்தை மண்ணில்
விதித்தெடுத்துச் சென்றாள் விரைந்து….(32)….5-10-2010

அழைக்கும் சிலம்பொலியை அன்னப் பறவைகள்
கழைத்தோள் பார்வதிபால் கற்க -குழைந்தவள்முன்
தக்ஷிணையாய் தம்மன்னத் தத்திநடை தந்துவிட்டு
சிக்ஷைக்காய் ஏந்தும் சிறகு….(33)….5-10-2010

ஒயிலாய் உருண்டு ஒழுங்காய்த் திரண்ட
கயிலாயப் பெண்முழங் காலை -அயனவன்
செய்ய முயன்றதில் சேகரித்த லாவண்யக்
கையிருப்பு போச்சாம் குறைந்து….(or)
அய்ய! முயன்றதில் மெய்யின்மற் றங்கங்கள்
செய்ய அழகின்றி சோர்வு….(34)….5-10-2010

வேழத் துதிக்கை வெகுகடினத் தோலாகும்
வாழையதன் தண்டோ வெகுகுளிர்ச்சி -ஏழுலகில்
பார்வதி உற்றயிரு சேர்ந்த துடைகளுக்கு
நேர்கதியாய் ஒப்புமைகா ணேன்….(35)….5-10-2010

விடையேறும் ஈசன் மடியேறும் பாக்யம்
அடைய அருகதையிங்(கு) ஆர்க்கு -தடையேதும்
இல்லா(து) அமர்ந்த இவளின் இடையழகை
சொல்லாமல் எண்ணல் சிறப்பு….(36)….5-10-2010

இடைவஸ்த் திரத்தின் இறுகு முடிச்சின்
தடைதகர்த்(து) உந்தித் திசையில் -படையெடுக்கும்
மெல்லிய ரோமா வளியினொளி, மேகலையின்
துல்லிய ரத்தினத் தேசு….(37)….5-10-2010

மத்தியில் யாகத்து மேடைக் குறுகலை
ஒத்தயிடை கீழே உதரத்தில் -பித்தனெரி
மாறன் படியேற மூன்று மடிப்புகளால்
சாரம் அமைத்திளமை சேர்வு….(38)….5-10-2010

நூலுக்(கு) இடம்கொடாது சாலப் பரிந்திணைந்த
நீலக் கமல நயனத்தாள் -கோலயிரு
வெண்ணிற பாரங்கள் வாய்த்தயெழில் பார்வதி
எண்ணுதற்(கு) ஏற்ற எழுத்து….(39)….5-10-2010

செத்தொழிந்த மன்மதனால் செய்தயிரு கைகளும்
பித்தனவன் கண்டப் பிணைக்கயிறாய் -நித்தமும்
வாகாய் வளைக்குமவை யூகிக்க மாகவிக்கு
”வாகையினும் மென்மையாம்” வாக்கு….(40)….6-10-2010

நெட்டுயர்ந்த கொங்கைகள் நேர்த்தியால் நிற்கின்ற
வட்டக் கழுத்துமதை வளையவந்து -கட்டிடும்
முத்துமணி மாலையும், ஒத்தொன்றுக்(கு) ஒன்றழகில்
சித்தம் ஒருமிக்கும் சேர்ந்து….(41)….6-10-2010

சந்திரனில் இல்லையே செந்தா மரைவாசம்
செந்தா மரைக்கில்லை சாந்தகுணம் -செந்திரு
ஒர்கதியாய் மென்மையும் ஓதமும் மேவிடும்
பார்வதி சீர்வதனம் புக்கு….(42)….6-10-201

சிவந்த தளிர்மீது சிந்தியவெண் பூவாய்
பவழம்தன் மேல்முத்துப் பொட்டாய் -குவிந்த
அதரத்தில் பரவி அவளாய் உதிர்க்க
சிதறும் ஒளிப்புன் சிரிப்பு….(43)….6-10-2010

குயில்கொடிய யாழ்கொடிய கர்ண கடூரம்
பயில்கின்ற பார்வதியின் பேச்சால் -ஒயில்கொண்டு
வானத்(து) அமிழ்தாய் நிதானத் துடனின்சொல்
ஞானத் துடன்நல்கும் நாவு….(44)….6-10-2010

மாருதம் வீச மருள்நீல முண்டகமாய்
வேரதைப்போல் நீண்ட விழிகளின் -பாருதலை
மானுரைக்கக் கற்றாளா? மான்கற்றுத் தந்ததா
நானறியேன் நாராய ணா….(45)….6-10-2010

கையெடுத்து துரிகையில் மையடைத்து தீட்டியதாய்
பையுடைத்த ராஜநாகம் போல்நீள -மையலான்தன்
காமா யுதவில்லின் கர்வத்தை விட்டுரைத்தான்
ஆமாம் அவள்புருவம் அம்….(46)….6-10-2010

விலங்குகள் உள்ளத்தில் வெட்கம் இருப்பின்
கலங்கும் கவரிமான் கண்டு -துலங்குமவள்
கேசத்தால் தங்கள்வால் பாசம் துறக்குமாம்
ரோஷத்தால் நீங்கும் ரசிப்பு….(47)….6-10-2010

உவமைகள் யாவையும் ஓரிடத்தில் காண
அவயவங்கள் தேடி அலைந்து -சிவமய
சக்தியைச் செய்தான் சிரம்நான்(கு) உடையவன்
முக்திக்(கு) அவளழகே மெய்….(48)….6-10-2010

சஞ்சாரி நாரதர், சக்களத்தி அற்றவளாய்
பஞ்சாப கேசனுடல் பாகியாய் -பெஞ்சாதி
பார்வதியென்(று) ஆக்கும் பனிமலை மன்னனே
பார்விதி என்றார் பலத்து….(49)….7-10-2010

தும்புருவின் வாக்கில் திளைத்ததில் தந்தையும்
தம்பருவப் பெண்மணம் தாமதித்தான் -தென்புறும்
வேறுவாய்த் தீயினுள் வேள்வியவிர் பாகத்தை
தாரைவார்ப் பாரோ தெரிந்து….(50)….7-10-2010

வரம்கொட்டும் சாமி வரன்கேட்டுச் சென்றால்
தரம்பார்த்(து) இகழ்ந்திடுமோ தன்னை -வரையுற்றோன்
கேட்டு மறுத்துவிட்டால் கேலிப் பொருளாகும்
பாட்டை நினைத்துவிட்டான் பற்று….(51)….7-10-2010

அப்பனிடம் கோபித்து அப்பார்வதி தன்னுடலை
எப்போது தீயில் எரித்தாளோ -அப்போதே
அத்தனை ஜீவனையும் ஆளும் சிவபிரான்
பத்தினி பற்றொழித்தார் பார்….(52)….7-10-2010

கின்னரர், கஸ்த்தூரி, கங்கைக் கரையுயர்ந்து
விண்ணுறும் தேவமர வெற்பில்முக் -கண்ணரன்
அஞ்சு புலனாண்டு ஆனைத்தோல் பூண்டுதவம்
விஞ்சுமெழில் குன்றில் வளர்ப்பு….(53)….7-10-2010

சரக்கொன்றை சூடி, மரப்பட்டை போர்த்தி
சிரங்கால் மனோசிலை சாற்றி -விரைப்பூ
சிலாஜது மேவும் சிறுபாறை குந்தி
கலாஜடை யோந்தொண்டர் கூட்டு….(54)….7-10-2010

ஆளை உறையவைக்கும் பாளப் பனியிலரன்
காளை குளம்புகளால் கீறித்தன் -தோளுயர்த்தி
கர்வமாய் காட்டெருது கண்கலங்க கத்துதலால்
சர்வாங்கம் சிங்கம் சிலிர்ப்பு….(55)….7-10-2010

தானே தவப்பலன் ஆனோன் தனதெட்டில்
வானோர் விரும்பிடும் வேள்வித்தீ -ஏனோ
ஸமித்தால் எரியூட்டி செய்த தவத்தின்
நிமித்தம் சிவன்போக்கு நெஞ்சு….(56)….7-10-2010

தானாய்ச் சிறந்தவன், வானே வணங்கிடும்
மூணாம் விழிகொள் முதலையிம -வானே
பணிந்து தொழுது பணிவிடையைப் பெண்ணை
அணிந்திடச் சொன்னான் அழைத்து….(57)….7-10-2010

சஞ்சலம் செய்தாலும் கொஞ்சமும் மாறாத
நெஞ்சுரம் கொண்டோனே ஞானவான் -பஞ்செனப்
பார்வதி வந்து பணிவிடை செய்திட
ஓர்விழித் தீக்கண்ணன் ஒப்பு….(58)….7-10-2010

கொய்தனள் பூக்களை, செய்தனள் சுத்தமாய்
மெய்தவன் வீற்றிருக்கும் மேடையை -பெய்தனள்
தீர்த்தமும் தர்பையும்: நீர்தலையோன் தண்மதி
தீர்த்ததவள் கொண்ட தவிப்பு….(59)….7-10-2010

சர்கம் ஒன்று சுபம்
——————————————————————-

சர்கம் -2
————-

அந்த சமயம், அசுரனாம் தாரகனால்
நொந்த சுரர்கள் நடுநடுங்க -வந்தனர்
முன்னிருத்தி இந்திரனை முப்பது முக்கோடியும்
கண்ணிருநான் கோன்முன் குவிந்து….(60)….8-10-2010

சீதளத் தாமரை சூழ்தடாகக் கண்ணுக்கு
போததி காலை புலப்படும் -ஆதவன்போல்
வாடிய வானவர்முன் கூடிய வாசலில்
பாடிடும் நூலோன் பிறப்பு….(61)….8-10-2010

நாற்புறமும் பார்க்கவல்ல பார்ப்பனனை, பல்லுயிரை
தோற்றுவிக்கும் நற்கல்வித் தூயவனை -ஆர்பரித்து
தேவர்கள் தோத்திரமாய் தேவன் திருமுகத்தில்
தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010
(OR)
வான்முதல் பார்வரை வேய்ந்துயிர் வைத்தவனை
நான்முகனை நற்கல்வி நாயகனை -தேனமிழ்த
தேவர்கள் சூழ்ந்து திருமுகத்தில் தோத்திரமாய்
தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010

தத்துவமே, தோன்றல்முன் தேகநாமம் அற்றவரே
சத்துவமே ராஜஸமே தாமஸமே -முத்தவமே (OR)முத்தொழிலே
மூர்த்திகள் மூன்றான மூலமேவுன் காலில்கைக்
கோர்த்தோம் சரணா கதிக்கு….(63)….8-10-2010

தண்ணீர் பயனளிக்கத் திண்ணமாய் சக்தியாய்
நண்ணிய நான்முகனே நின்னருளால் -மண்ணில்
அசையும் உயிர்கள், அசையா பொருட்கள்
விசையுறச் செய்யுமுன் வித்து….(64)….8-10-2010

கற்பித்த முக்குண காரணத்தால் கொண்டீர்கள்
உற்பத்தி, காத்தருளல், உய்யுமுயிர் -தப்பித்தல்
என்றமுச் சக்திகளாய் இன்றுநீர் நின்றாலும்
அன்றசை(வு) இல்லா அயன்….(OR)
அன்றிருந்தீர் ஏகம் அடைந்து….(65)….8-10-2010

பெண்ணையும் ஆணையும் பாரித்து பாலிக்க
உன்னையே ஈறுடலாய் உற்பவித்து -முன்னைநீ
தந்தை ஒருகூறாய் ,தாயார் மறுகூறாய்
விந்தை புரிந்தாய் வகுத்து….(66)….8-10-2010

ஞாலம் படைத்தனை,கோலம் கொடுத்தனை
காலம் பகலிரவாய்க் கொண்டனை -மூளுமவ்
ஊழி உமக்குறக்கம் உற்பத்தி உன்விழிப்பு
வாழி விரிஞ்சன் விறல்….(67)….8-10-2010

காரணனே பாருக்கு, காரணம் பாராத
பூரணனே, பாரைப் படைத்தழிப்போய் -ஓரணுவும்
தொல்லை கொடுக்காத தோற்றம் முடிவற்றோய்
இல்லை உமக்கிங்கே ஈடு….(68)….9-10-2010

தானாகத் தன்னிலே தோன்றித் தனக்குள்ளே
காணா(து) ஒடுங்கிடும் கற்பம்நீர் -வானாக
தீயாக, மண்ணாக, தண்ணீர் வளியாக
ஓயா(து) உழைத்திடும் ஓய்வு….(69)….9-10-2010

திரவப் பொருளாய், திடமாய், உருவாய்
அருவம் நிகர்த்த அணுவாய் -கருவத்து
பாரமாய் லேஸாய், புலனுணர்வாய், பூதமாய்
ஏராள மானஏ கா….(OR)
ஏராளம் உந்தன் எடுப்பு….(70)….9-10-2010

ஓங்கார மூன்றுசுர உச்சரிப்பால் தோன்றிடும்
ரீங்கார வேத ரகசியத்தால் -ஆங்காங்கு
செய்திடும் யாகமும் சொர்காதி பேறுகளும்
பெய்திடும் தேவரீர் பாங்கு….(71)….10-10-2010

காட்சிக்கு சாங்கியம் கூறும் பிரகிருதி
சாட்சிக்கு சுத்தபுரு ஷோத்தமன் -ஆட்சிக்(கு)
அகப்பட ஜீவனாய் ஆகிடும் நீரே
சுகப்படுவீர் ஆன்மனில் சேர்ந்து….(72)….10-10-2010

விண்ணத் தனையும் விழுந்து வணங்கிடும்
தென்னத் திசையோர் துதித்திடும் -அன்னத்(து)
அயனே (OR) அயன்நீர் மரீசி செயலாம் சிருஷ்டிக்
குயவன் களிமண் கரம்….(73)….10-10-2010

யாகம்நீர் யாகஅவிர் பாகம்நீர் பாகமுண்ணும்
தேகம்நீர் திவ்வியங்கள் தந்தருள்நீர் -மேகம்நீர்
தேர்ந்த பொருட்கள்நீர் தேர்ச்சிநீர் தேர்வும்நீர்
நேர்ந்ததுவாய் நின்றீர் நினைத்து….(74)….10-10-2010

வரஸ்துதியாய் வேண்டாது வாக்கில் பொருளில்
சுரஸ்துதியின் சீரால் சிலிர்த்து -சரஸ்வதி
ஆசை மணாளன் ஆர்வம் மிகவுற்று
பேசப் புகுந்தான் பதில்….(75)….10-10-2010

வேதம் வடித்ததால் ஆதிகவி ஆனவன்
போது கமலமெப் போதும்வாழ் -நாதனுரை
நான்கு முகத்தினால் நான்கு முகமாக
வான்குவிந்தோர் காதில் விருந்து….(76)….11-10-2010

வண்டி நுகத்தடியாய் வாய்த்தநீள் கைகளும்
அண்டர் பதவியும் ஆளுமையும் -கொண்டிருந்தும்
கூடியிருந்து இங்கு குறைவற்ற நீங்களென்
வீடடைந்தீர் வாழ்க வரவு….(77)….11-10-2010

காயும் முழுநிலவும் கண்சிமிட்டும் தாரகையும்
மேயும் பனித்திரையால் மங்குதலாய் -நீயுமுன்
கூட்டமும் கொண்டஇவ் வாட்டமேன் வஜ்ஜிரா
பாட்டன் எனக்குப் பகர்….(78)….11-10-2010

விருத்திரன் மாய வரைகள் சாய
நிறத்தினால் வானவில் நாண -கரத்திருந்த
வச்சிரம் வாடி வளைந்துமுனை தேய்ந்துவெறும்
குச்சியாய் ஆனதேன் கோன்….(79)….11-10-2010

மந்திரத்தால் கட்டுண்ட மாசுணமாய்க் கைப்பாசம்
தன்திறம் விட்டுத் தவழ்வதேன் -உன்தரப்பு                                                                                                               காரணம் என்னவோ கார்முகில் காவலா
வாருணா கூறுவாய் விட்டு….(80)….11-10-2010

சுபாவமாய் கையிருக்கும், சத்ருவைக் கொல்லும்
அபார கதாயுதம் அற்ற -குபேரா
கிளையிழந்து கொம்பாய் கரதலம் கூனி
களையிழந்தீர் கூறும் கலி….(81)….11-10-2010

துள்ளிக் குதித்தவுணர் தொல்லை தகர்த்தவரைக்
கொல்லும் தண்டத்தை கேலிசெய்தல் -கொள்ளித்
தடியால் தரைதனில் கோடிடுதற்(கு) ஒத்த
படியாம் எமனேன் பயம்….(82)….11-10-2010

வீசுமொளி போனதால், தேசு குறைந்ததால்
கூசிடாது பார்க்க குளிர்ச்சியாய் -பூசிய
சீலையின் ஓவியமாய் சூரியர்காள் பன்னிருவர்
வேலையற்றுக் கொண்டதேன் வேர்ப்பு….(83)….11-10-2010

துள்ளும் நதிவெள்ளம் மெல்ல எதிர்திசையில்
செல்லத் தடையென்று சொல்லலாம் -கொல்லும்
வருத்தம்தான் என்ன? மருத்துக் களேழும்
சிறுத்ததேன் சீறாது சோர்ந்து….(84)….12-10-2010

ஹூங்காரம் செய்யும் உருத்திரர்காள், வார்சடை
தாங்காது தொய்வதேன் தண்மதியால் -ஏங்காணும்
விண்ணிருந்தும் வீரமற்று வையத்தைப் பார்க்கிறது
கண்ணிரெண்டும், ஏனிக் குனிவு….(85)….12-10-2010

பொதுவிதியை போக்கும் புதுவிதியைப் போலே
இதுவரை ஆண்ட இடத்தை -எதிரிகள்
உட்புகுந்து கொண்டனரோ, உங்களுயர் அம்பரம்
முட்புகுந்த(து) ஏனோ மொழி….(86)….12-10-2010

தோற்றுவிக்கும் என்னை துயருலகை சூழுங்கால்
தேற்றுவிக்கும் தாங்களேன் தேர்ந்தெடுத்தீர் -சாற்றிடுவீர்
உள்ளதை உள்ளபடி பிள்ளைகாள் போட்டுடைப்பீர்
தெள்ளத் தெளிவாகத் தான்….(87)….12-10-2010

அண்டிய தென்றலால் ஆடிடும் முண்டகம்போல்
கொண்டகண்கள் ஆயிரத்தால் அண்டர்கோன் -விண்டினன்
தேவ குருவிடம் தக்கபதில் தோலுரித்து
பூவன் பழமாய்ப் பெற….(88)….12-10-2010

இந்திரன்தன் ஆயிரம் கண்களைக் காட்டிலும்
தன்திறனாய் தர்மார்த்த தேசுற்ற -மந்திரன்
தேவ ப்ரஹஸ்பதி சேவித்துச் செப்பினார்

நாவன் அயன்முன் நடப்பு (OR) நிகழ்வு….(89)….12-10-2010

ஒவ்வோர் உயிரிடத்தும் ஊடுறுவும் வல்லோனே
எவ்வா(று) அறியா(து) அளப்பீர்நீர் ! -அவ்வாறே
தாங்களே சொன்னவண்ணம் நாங்கள் துயரடைந்தோம்
தீங்குளத் தோரால் தவித்து….(90)….12-10-2010

விண்ணுச்சி தோன்றும் விபரீத தூமகேது
தன்னிச்சைத் தீயவன் தாரகன் -முன்னுச்சி
உம்மைக் குளிரவைத்து உற்றவர கர்வத்தால்
பொம்மையாய் ஆனோம் பயந்து….(91)….12-10-2010

பாவியவன் ஊரில் பரிதா பமாய்க்கதிரோன்
வாவியுள்ள அல்லிமட்டும் வாழ்வதற்கு -தேவையான
வெய்யிலைத் தந்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க
கையினால் பொத்துகிறான் கண்….(92)….12-10-2019

பாராது பக்ஷங்கள் பாரபக் ஷத்தோடு
தாரா சுரனூரில் தொண்டாற்றும் -தாரகேசன்
தாரு வனமழித்த தாணு தல

Comment...